மரத்தடியில் கஞ்சா புகைக்கும் பள்ளி மாணவர்கள்! வைரலாகும் வீடியோ
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளியின் அருகே உள்ள மரத்தடியில் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை எடுத்து புகைப்பது போன்ற வீடியோ அப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரவி வருகிறது.
ஏற்கனவே செங்கம் பகுதியில் கஞ்சா விற்பனையானது அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இது போன்று மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வீடியோ சமூக வலைத்தளங்களில், ஊடகங்களிலும் வைரலாகி வருவது அப்பகுதி மக்களிடம் குறிப்பாக பெற்றோர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது மாணவர்கள் குறித்தும், மாணவர்கள் கஞ்சா புகைப்பது போல வெளியான வீடியோ எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும் விரைந்து இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் இந்த வீடியோ குறித்து விரைவில் ஆராய்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கம் அருகேயுள்ள மேல்செங்கம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, சாத்தனூர், இறையூர்,மேல்புழுதியூர், செங்கம் தளவாநாயக்கன்பேட்டை, பரமனந்தல் சாலை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.