வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிக்கும் சீமான்! பாமகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? 

Photo of author

By Parthipan K

வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஆதரிக்கும் சீமான்! பாமகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா?

இட ஒதுக்கீடு விவகாரத்தில் யாரும் இவரை குறை சொல்ல முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கமாக வன்னியர் வாக்குகளை அறுவடை செய்து வரும் திமுக,வன்னியர்களை நம்பியிருக்கும் தேமுதிக மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கும் இந்நிலையில் சீமானின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக நீதியின் தொட்டில் என்றழைக்கப்படும் தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கேட்டு மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சார்ந்த வன்னிய சமுதாய மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறார்கள் .ஆனால் அவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இன்னும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் வன்னிய சமுதாய மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கூறி பாமக சார்பில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மக்கள் தொகையின் அடிப்படையில் அந்தந்த சமுதாயத்திற்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு கேட்டு போராடுவதால் இந்தப் போராட்டத்தை பல்வேறு சாதி அமைப்புகளும் , தமிழர் நலன் சார்ந்த கட்சிகளும் ஆதரவு குரல் கொடுத்து வருகிறார்கள்.அதே போல் இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் கூட்டணி என்று அதிமுகவிடம் கறாராகக் கூறிவிட்டார் மருத்துவர் ராமதாஸ்

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வன்னிய மக்களின் இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு போராட்டத்தை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சீமான் பேசுகையில் “இட ஒதுக்கீடு கொள்கையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் உறுதிப்பாடு மற்றும் செயல்பாடுகளை யாரும் குறை சொல்ல முடியாது” என்றார் மேலும்”பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை எதிர்க்காதது வருத்தமளித்தது” என்றும் கூறியிருந்தார்.

சீமான் தற்போது மருத்துவர் ராமதாஸின் போராட்டத்தை ஆதரித்து காரணத்தினால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை எனில் அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கப்படும் என மருத்துவர் ராமதாஸ் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

சீமானின் இந்த இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான பேச்சு பாமக உடன் கூட்டணிக்கு அச்சாரமாகவும் இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.