முருகதாஸூம் ரஜினியும் எத்தனை நாள் சிறையில் இருந்தார்கள் ?சீமான் ஆவேசம் !
தர்பார் படத்தில் வைக்கப்பட்டு இருந்த காசு இருந்தால் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் கூட செய்யலாம் என்ற வசனம் தொடர்பாக சீமான் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக கலவையான விமர்சனங்களையும் சுமாரான வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு காட்சிக்காக இப்போது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
படத்தில் சிறையில் செல்போன் உபயோகிப்பது போன்ற காட்சி ஒன்றில் ’காசு, பணம் இருந்தால் சிறையில் இருந்து வெளியே போய் ஷாப்பிங் கூட செய்யலாம்’ என்று ஒரு வசனம் வைக்கப்பட்டிருந்தது. இது அமமுக தலைவர் சசிகலாவை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து அடுத்த நாளே அந்த வசனம் உடனடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது பற்றி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது ‘காசு இருந்தால் பணம் இருந்தால் சிறைக்குள் இருந்தாலும் வெளியே சென்று பொருள்களை வாங்கலாம் என்ற விமர்சனத்தை நான் ஏற்கவில்லை.
தம்பி முருகதாஸ், ரஜினி எல்லாம் எவ்வளவு காலம் சிறையில் இருந்தார்கள் என்று தெரியவில்லை. உண்மையிலேயே அவர்கள் வெளியே வந்தார்கள் என்று நிரூபிக்கபட்டால் நீங்கள் பேசலாம். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி பேசமுடியும்.’எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கமாக அரசியல் கருத்து பேசும் படங்களுக்கு ஆதரவளிக்கும் சீமான் ரஜினி படம் என்பதால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக பேச்சு எழுந்துள்ளது. அதுபோல சீமானின் இந்த திடீர் அமமுக ஆதரவு அவரது ஆதாரவாளர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.