அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

Photo of author

By Parthipan K

அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து! எச்சரிக்கும் சீமான்

உலக வெப்பமயமாதல் காரணமாக அமேசான் காடுகளின் அழிவு என்பது அந்த பகுதிக்கான பாதிப்பு மட்டுமல்ல உலக முழுவதும் இதனால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் அங்கு மொத்தமாக 73000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதில் 90% காட்டுத் தீ இன்னும் அணையவில்லை. நாளுக்கு நாள் அமேசான் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அமேசான் தீ தொடர்பாக தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் சீமான் சார்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரேசில் நாட்டிலுள்ள அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ அணையாது இரு வாரங்களாக கொளுந்துவிட்டு எரிகிற செய்தி உலகம் முழுக்க வாழும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெருங்கவலையையும், சூழலியல் குறித்த பேரச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தப் பூமிப்பந்திற்கே ஆக்சிசனைத் தரும் அமேசான் காடுகளில் ஏற்பட்டிருக்கிற இக்காட்டுத்தீ கடந்தாண்டு ஏற்பட்டதைவிட 86 மடங்கு அதிகம் என எச்சரிக்கிறார்கள் சூழியல் செயற்பட்டாளர்கள்.

சூழலியல் குறித்தப் பார்வையோ, அக்கறையோ இல்லாத பிரேசில் அதிபர் போல்சோனரோ அமேசான் காடுகளின் அழிவைத் தடுக்க எவ்வித முன்முயற்சியையும் எடுக்காதிருப்பதும், அமேசான் காடுகளில் இருக்கிற கனிம வளங்களை வேட்டையாடுவதற்குக் கடைவிரிக்கிற வகையில் அந்நாட்டின் சூழலியல் கொள்கையை வகுத்திருப்பதும் வேதனைக்குரிய செய்திகளாகும்.

ஒட்டுமொத்த உலகில் மனிதர்கள் சுவாசிக்கக்கூடிய ஆக்சிசன் மூச்சுக்காற்றில் 20 விழுக்காட்டினை அமேசான் காடுகளே தந்து உதவுகின்றன. அத்தகைய அதிமுக்கியத்துவம் வாய்ந்த பணியினைச் செய்வதாலேயே அமேசான் காடுகளை உலகின் நுரையீரல் என அழைக்கிறார்கள். அத்தகைய அதிஉன்னதக் காடுகளில்தான் தற்போது காட்டுத்தீ பரவி மிகப்பெரிய இயற்கை சீரழிவு ஏற்பட்டிருக்கிறது.

பொதுவாக ஈரப்பதமின்மையால்தான் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆனால், தற்போது ஈரப்பதம் இருந்தும் அமேசான் காடுகள் தீப்பிடித்து எரிவதற்குக் காரணம் முழுக்க முழுக்க காடுகளை அழிக்கும் ஆளும் வர்க்கத்தின் வரம்பற்ற இயற்கைச் சுரண்டல்தான் எனத் தெரிவிக்கிறார்கள் சூழலியல் பேரறிஞர்கள்.வரும் நூற்றாண்டில் இப்பூவுலகு எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் சிக்கலாக இருக்கப்போவது புவி வெப்பமாதலும், காலநிலை மாற்றமும்தான்.

அதனை உலகின் மிக முக்கியமானச் சூழலியல் செயற்பட்டாளர்கள் அத்தனைப் பேரும் உறுதிசெய்துவிட்டார்கள். அதனைத் தடுக்க உலகின் முதன்மை நாடுகள் யாவும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும் இயற்கைக்கு எதிரான செயற்பாட்டை இன்னும் அந்நாடுகள் நிறுத்தியபாடில்லை. பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிற இந்நாட்டின் பிரதமர் மோடி ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பேசுகிறபோது, ‘இயற்கையைப் பாதுகாக்கிற பாரம்பரியத்தில் வந்த இந்தியா ஒருபோதும் இயற்கைக்கு எதிரான வேலையினைச் செய்யாது’ என முழங்கினார்.

அவர் இட்டிருக்கிற ஒப்பந்தத்தின்படியும், அவர் கூறியிருக்கிற கூற்றின்படியும், பூமியைப் பிளந்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எனப் புதைபடிம எரிபொருட்களை ஒருபோதும் எடுக்கக்கூடாது. மேலும், இயற்கை சமநிலையை நிலைநிறுத்த காடுகளைக் காக்க வேண்டும். புதிதாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது காடுகளில் வாழும் பூர்வக்குடிகள் மீது அத்துமீறி தாக்குதல் தொடுத்து அவர்களை அவர்களது மண்ணைவிட்டு வெளியேற்றி வனவேட்டையாடிக் கொண்டிருக்கிறது.

நாட்டில் இருக்கிற இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் இலாபவெறி வேட்டைக்குத் தாரைவார்த்து அதனை இரையாக்க அத்தனைச் சட்டங்களையும் முதலாளிகளுக்கு ஆதரவாக வளைத்துக் கொண்டு இருக்கிறது இந்தியாவை ஆளும் மோடி அரசு.புவி வெப்பமாதல் காரணமாக பனிப்பாறைகள் உருகுவதால் கடல்நீர் மட்டம் உயர்வடைந்து உலகம் முழுக்கக் கடற்கரையோரப் பகுதிகள் யாவும் வரும் நூற்றாண்டில் பெரிய அழிவைச் சந்திக்கும் என எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதனால், லண்டன், நியூயார்க், ஷாங்காய், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட உலகின் பெருநகரங்கள் தங்களது நிலப்பகுதியைக் கடற்கோளுக்கு இழந்து, இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை நாடான வங்காளதேசம் 2100ஆம் ஆண்டு கடலில் மூழ்கி வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2050ஆம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் தங்கள் நாடு எதிர்கொள்ளப் போகும் சிக்கலை உணர்ந்து, அந்நாட்டின் நகரான ஜகார்த்தாவிலுள்ள தலைநகரை மாற்ற முடிவெடுத்துள்ளது இந்தோனேசியா.காலநிலை மாற்றத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிற தற்காலச் சூழலில் உலகின் அரிய வாழ்விடமாக விளங்கும் அமேசான் காடுகள் அழிவது மிகப்பெரிய சூழலியல் அசமத்துவத்தையும், மோசமான தாக்கத்தையும் உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலக நாடுகள் தீவிரமாக இயங்க வேண்டிய நெருக்கடி நிலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைத் தணித்து வந்த அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிவுக்குள்ளாகியிருப்பது மிக மோசமான எதிர் விளைவுகளை உருவாக்கும். சூழலைக் காத்து வந்த அமேசான் காடுகள் அழிந்து வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் ஒருபுறமிருக்க, மறுபுறம் தீப்பிடித்துள்ளதால் அவை அதிகப்படியானக் கார்பனை வெளியிட்டும் வருவதால் மிகவேகமான காலநிலை மாற்றத்தை உருவாக்கும் அபாயம் இருக்கிறது.

‘தற்போது பூமியில் வெளியாகும் கார்பனை உள்வாங்க போதிய மரங்கள் இல்லை’ என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது பி.பி.சி. இது பூவுலகின் கடைசி காலம் என எச்சரிக்கிறார்கள் சூழலியல் நிபுணர்கள். வேறு கிரகத்திற்குப் பயணப்படுங்கள் என எச்சரித்துவிட்டுச் சென்றிருக்கிறார் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங். அழிவின் விளிம்பில் இருக்கிற இயற்கை அன்னையைக் காக்க காடுகளால் மட்டுமே முடியும்.

அதனை அழியவிடுவது இப்பூமிப்பந்தை மிகப்பெரும் அழிவிலேயே கொண்டுபோய் நிறுத்தும். ஆகவே, இயற்கைத்தாயின் மடியாக விளங்கும் அமேசான் காடுகளின் அழிவு என்பது ஒட்டுமொத்த உலகிற்கே ஏற்பட்டிருக்கிற சூழலியல் பேராபத்து. மானுடக்குலத்தின் அழிவுக்கே வழிவகுக்கும் பெருந்தீங்கு என்பதனை உணர்ந்து இனியாவது சூழலைக் காக்க அணியமாவோம், என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்