வரலாற்று உச்சத்தை தொட்ட இந்திய பங்கு சந்தை! மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்
முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் இன்று இந்திய பங்கு சந்தையானது முதன் முறையாக வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததுமே சந்தை ஏற்றத்தை நோக்கி பயணித்தது. ஆரம்பத்தில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 211.40 புள்ளிகள் அதிகரித்து, 50.003 என்ற புள்ளிகளிலும், அதே போல தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 146 புள்ளிகள் அதிகரித்து 14,790 என்ற அளவிலும் வர்த்தகம் ஆனது.
ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் முதன் முறையாக 50,000 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாக தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 223.17 புள்ளிகள் அதிகரித்து, 50,015.29 புள்ளிகளாகவும், அதே போல நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து, 14,707.70 புள்ளிகள் என்ற அளவிலும் வர்த்தகமாக தொடங்கியது.அதன் பின்னர் சென்செக்ஸ் 50149 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 14745 புள்ளிகள் என்ற அளவிலும் உச்சத்தை தொட்டு வர்த்தகமாகியது.
இந்திய பங்கு சந்தை உயர்வுக்கு காரணம்:
அமெரிக்காவின் பங்கு சந்தைகள் வரலாற்று உச்சத்தினை அடைந்துள்ளது. இது புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், விரைவில் அமெரிக்காவின் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க மற்றொரு மிகப்பெரிய ஊக்கத்தொகை வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக டாலரின் மதிப்பும் வலுவடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அமெரிக்க சந்தை வரலாற்று உச்சத்தை அடைந்த நிலையில் அதன் எதிரொலி சர்வதேச சந்தைகளிலும் ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் ஆசிய சந்தைகளும் நல்ல ஏற்றதுடன் வர்த்தகமாகி வருகின்றன.அதன் அடிப்படையில் தான் இந்திய பங்கு சந்தையும் வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.