அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய செந்தில் பாலாஜியின் தம்பி! அதிரடி காட்டும் அதிகாரிகளால் பீதியில் இருக்கும் முக்கிய புள்ளிகள்!
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார்.இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கியது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த அவசர மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.மேலும் 12 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் ஆகஸ்ட் 7 இரவிலிருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலை வரை விசாரணை மேற்கொண்டனர்.மேலும் விசாரணையில் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து செந்தில் பாலாஜியின் பதில்களை விடியோவாக பதிவு செய்தனர்.
இந்நிலையில் 5 நாள் காவல் விசாரணை முடிந்து கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை ஆஜர் படுத்தினர்.இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் வருகின்ற 25 ஆம் தேதி வரை அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் எற்கனவே பல முறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.ஆனால் அவர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு பிறகு விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருந்து வந்தார்.இதனை தொடர்ந்து அசோக் குமார் நாடு கடந்து செல்லாத வகையில் அவருக்கு அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அசோக்குமாரின் மனைவி பெயரில் கரூரில் கட்டப்பட்டு வரும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற அசோக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்தனர். மேலும் அவரை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.