ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்!
தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எங்கே? எப்படி? அனுப்புவது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எத்தனையோ கால போராட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக தற்போது சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர்.
ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் பதைபதைக்கும் விதமாக உள்ளது. பள்ளிகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். மேலும் அதை வெளியில் சொல்ல முடியாமல் அவர்கள் மன உளைச்சலிலும் ஈடுபட்டு, அதன் மூலம் தற்கொலை செய்யும் அளவிற்கு துணிந்து விடுகின்றனர்.
இப்படியான சூழ்நிலைகள் எப்போது மாறும். குழந்தைகளை குழந்தைகளாக எப்போது பார்ப்பார்கள்? ஏன் குழந்தைகளின் மீது இவ்வளவு வன்மம்? ஆசிரியர்களுக்கு என்ன வேலை? வகுப்பெடுப்பது தானே. அதை மட்டும் செய்தால் போதாதா? அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமாக இந்த சுமைகள் சுமத்தப்படுகிறது என்பது மிகவும் வேதனை அளிக்கும் விதமாக உள்ளது.
ஒன்றன் பின் ஒன்றாக வரும் குற்றச்சாட்டுகளை வைத்து பார்க்கும் போது அரசு இவர்களுக்கு போக்சோ சட்டதிற்கு பதில் இன்னும் கடிமையான சட்டத்தை இயற்றி கடுமையான தண்டனைகளை தர வேண்டும். அல்லது மக்களே அதை கையில் எடுக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள உங்களின் பிள்ளைகள் போல் தான் அனைத்து குழந்தைகளும்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பெருந்துறை குன்றத்தூர் ரோடு ஐயப்பன் கோவில் அருகே உள்ள கூட்டுறவு நகரை சேர்ந்த திருமலை மூர்த்தி என்பவர் உயிரியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு வயது 50.
இந்த நிலையில் இவர் மீது முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை தற்போது சுமத்தியுள்ளனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களின் மூலம் அறிவித்தனர். இதையடுத்து இது குறித்த விசாரணை நடத்துமாறு, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில் நேற்று முன்தினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் மூலம் திருமலை மூர்த்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்து குற்றத்தில் ஈடுபட்டது அம்பலமானது.
அதனை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி உயிரியல் ஆசிரியர் கைதான நிலையை அடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரையும் கைது செய்யக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
போராட்டத்தை தற்போது நடத்திவரும் மாணவர்களிடையே போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் நடத்தி உள்ளார்கள். இருப்பினும் மாணவிகள் பாலியல் புகார் குறித்து தலைமை ஆசிரியரையும் கைது செய்ய வேண்டும் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.