“கனவு நனவாகிடுச்சு… “ இந்திய அணிக்காக செலக்ட் ஆகிய இந்திய வீரர் மகிழ்ச்சி
இந்திய அணி ஜிம்பாப்வே சென்று விளையாடும் தொடரில் ஷபாஸ் அகமது கடைசி நேரத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வே தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால், மற்றொரு இளம் வீரரான ஷபாஸ் அகமதுக்கு அணியில் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் தனது கனவு நிறைவேறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளை ஜிம்பாப்வேயில் இந்திய அணி விளையாடுகிறது. முதலில் ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கே எல் ராகுல் அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இங்கிலாந்தில் நடந்த ராயல் லண்டன் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்ததன் காரணமாக அணியில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக இளம் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்றார். இப்போது இந்திய அணிக்குள் இடம்பெற்று அறிமுக தொடரில் விளையாட உள்ளார். இந்நிலையில் நாட்டுக்காக விளையாடும் கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறியுள்ள அவர் “கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு தனது சொந்த நாட்டுக்காக விளையாட வேண்டுமென்ற கனவு இருக்கும். எனக்கு இப்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது. இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பைக் கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.