கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ரசிகனும் தங்களுடைய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என நினைப்பர். இந்தியாவை பொறுத்தவரையில் கிரிக்கெட் ஒரு மதம் போலவே கருதப்படுகிறது. ரசிகர்களும் தங்களது ஆதரவை சலைக்காமல் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது ரசிகர்களிடைஏ மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 16 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது. இதனால், இந்தியாவின் உலக கோப்பை கனவு தகர்ந்தது. இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் பங்கேற்ற உலக கோப்பை இறுதி போட்டி நடைபெற்றது. இதில், இங்கிலாந்து பெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றியது.
இதற்கிடையில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் தனது டிவிட்டர் பக்கத்தில் இதயம் உடைந்தது போன்ற எமோஜியை பதிவிட்டார். அதற்கு இந்திய வீரர் முகமது ஷமி மன்னிக்க வேண்டும் சகோதரா இது தான் கர்மா என பதிவிட்டிருந்தார். இதற்கு முன் சோயிப் அக்தர் இங்கிலாந்து, இந்தியா போட்டியின் போது இந்திய வீரர்களை விமர்சித்திருந்தார். இந்திய வீரர்கள் மோசமாக விளையாடியதால் அவர்களுக்கு உலக கோப்பை இறுதி போட்டிக்குள் நுழைய தகுதி இல்லை எனவும் இந்தியாவின் வேகபந்து வீச்சு அம்பலமாகி விட்டதாகவும் பதிவிட்டிருந்தார்.
முகமது ஷமியின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் அனைத்தையும் விளையாட்டு உணர்வோடு எடுத்து கொள்ளாமல் பழிக்கு பழி என நினைத்து ஷமி செய்த இந்த செயல் அவரின் மதிப்பை குறைத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.