சுயமரியாதைக்காக போராடும் சிவதாணு! இருபது வருடத்தை கடந்த தங்கரின் சொல்ல மறந்த கதை!
தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர் பட்டியலில் தங்கர்பச்சான் அவர்களும் ஒருவர். அந்த வகையில் மக்களின் வாழ்வியலை அப்படியே தன்னுடைய திரைப்படங்களில் காட்சிகளாக வைப்பதில் கை தேர்ந்தவர். இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் மக்களின் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டதாக தான் இருக்கும். அதே போல அவர் தேர்வு செய்த நடிகர்களும் அதில் நடித்தார்கள் என்பதை விட வாழ்ந்தார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்திருப்பார்கள்.
அந்த வகையில் தங்கர்
பச்சான் இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் தான் சொல்ல மறந்த கதை. நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளரான நாஞ்சில் நாடன் அவர்களின் முதல் நாவலான தலைகீழ் விகிதங்கள் புதினத்தை இயக்குனர் தங்கர்பச்சான் திரைப்படமாக எடுத்துள்ளார். தலைகீழ் விகிதங்கள் நாவலை படிக்கும் போது தான் அழுத பகுதிகளை திரைக்கதை ஆக்கும் போதும் உணர்ச்சி வசப்பட்டதாக அவரே தெரிவித்திருந்தார். அது படமாக வந்த போது பார்வையாளர்களும் அதே இடங்களில் உணர்ச்சி வசப்படும் வகையில் தான் கட்சிகள் அமைந்திருக்கும்.
சொல்ல மறந்த கதை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இயக்குனர் சேரன் . இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்புத்திறன் பரவலாக பேசப்பட்டு பாராட்டும் பெற்றார்.
இயக்குனர் சேரனை இத்திரைப்படத்தில் தேர்வு செய்ததற்கான காரணம் தங்கர்பச்சானிடம் கேட்டபோது,’நான் ஒளிப்பதிவாளராக இருந்த ‘பாண்டவர் பூமி’ படத்தில் சேரன் தனது கலைஞர்களை இயக்கியதைப் பார்த்திருக்கிறேன். என் படத்துக்கு நடிகரை தேடும் போது, அவர் தான் என் நினைவுக்கு வந்த முதல் பெயர்” என்று கூறியிருக்கிறார்.
சொல்ல மறந்த கதை படத்தின் அனைத்து பாடல்களையும் இளையராஜா எழுதி இசையமைத்துள்ளார்.
இயக்குனர் தங்கர் பச்சானின் இரண்டாவது திரைப்படமான சொல்ல மறந்த கதை ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பணக்கார வீட்டுக்கு மருமகனாக சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை மையமாக கொண்டு இயக்குனர் காட்சிப்படுத்தியிருப்பார். சிவதாணுவாக சேரன் கதையில் நடித்தார் என்பதை விட வாழ்ந்திருப்பார். நடிகை ரதி பார்வதியாக இப்படத்தில் எப்போதும் பாவமாக அழுது கொண்டே இருப்பார், பணக்கார மாமனாரான சொக்கலிங்கம் செய்யும் அநீதி சிவதாணுவையும் கோவமடைய செய்தது, படத்தை பார்த்த பார்வையாளர்களையும் கோவமடைய செய்தது.
சொல்ல மறந்த கதை திரைப்படத்தில் தனிமனித சுதந்திரத்தில் சுயமரியாதை எந்த அளவுக்கு பெரும் பங்காற்றுகிறது என்பது காட்டப்பட்டிருக்கும். அதை எப்போதும் எவருக்கும் விட்டுக்கொடுக்காத வாழ்வையே மனிதன் இயற்கையிடம் மன்றாடுகிறான். அதையும் அழுத்தமாகப் பேசுகிறது இந்த படத்தின் திரைக்கதை.
இருபது வருடம் கழித்து இத்திரைப்படத்தை பார்த்தாலும் சுயமரியாதைக்காக போராடும் சிவதாணுவின் கதாபாத்திரச் சித்தரிப்பில் இருக்கும் நேர்மை அப்படியே பார்வையாளர்களைப் பற்றிக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.