தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு? பகீர் கிளப்பும் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Photo of author

By CineDesk

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கோரதாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பதற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவோக்சின், கோவிட்ஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16ம் தேதி முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டு இரண்டாவது டோஸ் 28 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசு 4 வாரம் முதல் 6 வாரத்திற்குள் 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் இருதினங்களுக்கு முந்தைய நிலவரத்தின் படி, மொத்தம் 27 லட்சத்து 53 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரத்து 233 பேருக்கும், 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கும், இணை நோயுடன் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 374 பேருக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அரசின் 1,900 மினி கிளிக்குகள் மூலமாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தீயாய் பரவி வரும் இந்த நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசு முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவதால், தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி அளவு குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளவே பெரும்பாலான மக்கள் விருப்பம் தெரிவிப்பதால், அந்த மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே ஏப்ரல் 2ம் தேதி தமிழகத்திற்கு மத்திய அரசு சார்பில் கூடுதலாக 7 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட உள்ளதால், அதன் பின்னர் தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சுகாதாரத்துறை கைவசம் 8 லட்சம் தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கபட்டுள்ளதாகவும், தினமும் ஒரு லட்சத்து 3 ஆயிரம் வரையிலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.