துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆறரை கிலோ தங்கம்! 2 வாலிபர்கள் கைது!
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம் (28), ராமநாதபுரத்தை சேர்ந்த சாதிக் அலி (30) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், சிக்ரெட்டுகள் இருந்தன. மேலும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 பேரும் தங்களுடைய ஆடைக்குள் தங்கத்தை ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 980 கிராம் தங்கமும் ரூ. 8 லட்சத்தி 75 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்கள், சிக்ரெட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.
அதுப்போல் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய ஆண்கள் கழிவறையில் கேட்பரற்று ஒரு பார்சல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. வெடிகுண்டு இருக்குமோ என்று எண்ணி மோப்ப நாயுடன் மத்திய தொழிற்படை போலீசார் சோதனை செய்தனர். வெடிகுண்டு இல்லை என தெரிந்ததால் சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்த போது அதில் தங்க கட்டிகள் இருந்தன. ரூ. 1 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 520 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
ஒரே நாளில் நடத்திய சோதனையில் ரூ. 3 கோடியே 9 லட்சத்தி 75 ஆயிரம் மதிப்புள்ள ஆறரை கிலோ தங்கமும் லேப்டாப்கள், சிக்ரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவற்றை கடத்தி வந்த 4 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.