சுந்தர் பிச்சைக்கு பறந்த அவதூறு நோட்டீஸ்!! கடும் கொந்தளிப்பில் உயர்நீதிமன்றம்!!

Photo of author

By Anitha

தியான் அறக்கட்டளை என்ற அமைப்பின் அவதூறு வீடியோ தொடர்பான வழக்கில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு நேரடியாக அவமதிப்பு நோட்டீஸ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட தியான் அறக்கட்டளை சமூக நலன் சார்ந்த ஒரு தனியார் அமைப்பு. இவ்வமைப்பு குறித்து, சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ ஒன்று வைரலாக பரவி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், அந்த வீடியோவை யூடியூபில் இருந்து உடனடியாக நீக்கும்படி மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கின் விசாரணையின் போது, அவதூறான வீடியோவை நீக்க உத்தரவிட்ட நீதிமன்றம், தனது உத்தரவை கூகுள் பின்பற்றவில்லை என கண்டித்தது. நீதிமன்றத்தின் கண்டனத்துக்குப் பிறகும், கூகுள் தரப்பில் எந்த மாற்றமும் ஏற்படாததால், அந்நிறுவனத்துக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

கூகுள் தரப்பில், “தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், அவதூறு வீடியோவை நீக்குவது சட்டபூர்வமான கடமையாகும் என்பது இல்லை. மேலும், இவ்வாறான வழக்குகளை கிரிமினல் நீதிமன்றங்கள் விசாரிக்க முடியாது; அது சிவில் நீதிமன்றங்களின் செயல்பாடாகும்,” என தெரிவித்தது.

ஆனால், இந்த வாதங்களை முறியடித்த நீதிமன்றம், “தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் இத்தகைய தடைகள் இல்லை. மேலும் மக்களின் நம்பிக்கையையும் பொது அமைதியையும் பாதுகாக்க இது மிக அவசியம்” எனக் கடுமையாகக் கூறியது.

தொடர்ந்த இந்த வழக்கில், தியான் அறக்கட்டளை சார்பில், அவமதிப்பு நோட்டீஸ் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்கி, விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.