ரூ.1000 பெறுவது குறித்த குறுஞ்செய்தி! தமிழக அரசு சொன்ன தகவல்
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.அதன்படி,வெற்றி பெற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்பொழுது இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதை ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’ திட்டம் என்று அறிவித்து செப்டம்பர் 15 ஆம் தேதி ‘அறிஞர் அண்ணா’ பிறந்த நாளன்று இத்திட்டம் செயல்பாட்டிற்கு வருமென்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து பயனாளர்களுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கும் பணிகளை ரேஷன் ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் அப்பணி நிறைவு பெற்றதையடுத்து விண்ணப்பங்களை பயனாளர்களிடம் இருந்து பெறுவதற்காக 2 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்படுமென்று தமிழக அரசு அறிவித்திருந்தது.இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதற்கட்ட முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து முதற்கட்ட முகாமில் 80 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான பணி கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட முகாமில் மீதமுள்ள பயனாளர்களின் விண்ணப்பங்கள் மற்றும் விடுபட்டு போன பயனாளர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் பணி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி வருகின்ற 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது முதற்கட்ட முகாமில் பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து விண்ணப்பத்தில் பயனாளிகள் கொடுத்துள்ள அலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.அதன் மூலம் நீங்கள் இந்த திட்டத்திற்கு தகுதியானவரா? இல்லையா? என்று தெரிந்து கொள்ள முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் நீங்கள் அளித்துள்ள விண்ணப்பம் ஒரு வேளை நிராகரிக்கபட்டால் மேல்முறையீடு(மறுபரிசீலனை) செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.