தீவிர கண்காணிப்பில் சமூக ஊடகங்கள்! கொரோனா குறித்து வதந்தி பரப்பினால் அதிரடி கைது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா நோய் அறிகுறி குறித்தும் அது பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை புதுப்பேட்டையில் உள்ள ஆயுதப்படை போலீசார் குடியிருப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை போலீஸ் கமிஷனர் ஏ .கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கூடுதல் கமிஷனர் எச். எம் ஜெயராம் ,இணை கமிஷனர் ஏ.ஜி. பாபு , துணை கமிஷனர் தர்மராஜன் ,சென்னை போலீஸ் மருத்துவமனை டீன் டாக்டர் சித்ரா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது. கொரோனா குறித்து யாராவது வதந்தி பரப்பினால் கைது செய்யப்படுவார்கள் இதற்காக வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசாரும் இணை கமிஷனர் தலைமையிலான சிறப்பு சைபர் கிரைம் பிரிவு போலீசார் கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஒருநாள் விழிப்புணர்வு காணொளி காட்சிகள் அடங்கிய வாகன ரோந்தையும் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார் . மேலும் அவரது உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் 23 இடங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.