நடப்பு சேம்பியனை மூன்றாவது முறையாக வீழ்த்திய தென்னாப்பிரிக்கா!!! வெற்றிக்கு இவங்க நான்கு பேரும் தான் காரணம்!!!
உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை மூன்றாவது முறையாக வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நேற்று(அக்டோபர்21) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது லீக் சுற்றில் கடைசி போட்டியில் அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த தென்னாப்பிரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் டிகாக் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் களமிறிங்கிய ரீசா ஹென்ட்ரிக்ஸ், வான் டெர் டுசேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து விளையாடிய ரீசா ஹென்ட்ரிக்ஸ் அரைசதம் அடித்து 85 ரன்களும், வான் டெர் டுசேன் அரைசதம் அடித்து 60 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய மார்க்ரம் தன்னுடைய பங்குக்கு 42 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
டேவிட் மில்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க பின்னர் இணைந்த கிளாசன் மற்றும் மார்கோ ஜன்சென் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய கிளாசன் 67 பந்துகளில் சதம் அடித்து 109 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய மார்கோ ஜன்சென் அரைசதம் அடித்து 75 ரன்கள் சேர்த்தார்.
இதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் பந்துவீச்சில் டாப்லே 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷித் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 400 ரன்கள் என்ற மெகா இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணி 100 ரன்கள் சேர்ப்பதள்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முக்கிய பேட்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களிலும், சொற்ப ரன்களிலும் ஆட்டமிழக்க மார்க் வுட் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். கஸ் அட்கின்சன் 35 ரன்கள் சேர்த்தார்.
மேலும் இங்கிலாந்து அணியில் ரீஸ் டாப்லே காயம் காரணமாக பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் பந்துவீச்சில் கெரால்ட் கோட்சே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லுங்கி இங்கிடி, மார்கோ ஜன்சென் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரபாடா, மஹராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம் கிளாசன்(109), ஜன்சென்(75), ஹென்ட்ரிக்ஸ்(85), வான் டெர் டுசேன்(60) ஆகிய நான்கு பேரின் சிறப்பான பேட்டிங் தான் காரணம்.