தென்கொரியா நாடானது தன்னுடைய 50 ஆண்டு வரலாற்றில் இல்லாதது போன்ற புதிய மாற்றமாக நேற்று இரவு அவசர நிலை பிரகடனத்தை உறுதி செய்தது.
தென்கொரியாவின் நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் அந்நாட்டின் ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது :-
இரவு 11 மணி முதல் இராணுவச் சட்டம் அமலாகும் என்று அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதனால் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இந்த அவசரநிலை பிரகடனத்தில் பலவிதமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல் நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் :-
பாராளுமன்றம் (தேசிய சட்டமன்றம்), உள்ளூராட்சி மன்றங்கள், அரசியல் கட்சிகள், பேரணிகள், போராட்டங்கள் மற்றும் வேறு எந்த வகையான ஆர்ப்பாட்டங்களுக்கும் அரசியல் சங்கங்கள் மற்றும் இணைப்புகளும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளன.
ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் :-
அச்சு, வானொலி, தொலைக்காட்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களிலும் உள்ள ஊடகங்கள் அனைத்தும் இப்போது இராணுவச் சட்டக் கட்டளையின் ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரணிகள் மற்றும் போராட்டங்களுக்கான கட்டுப்பாடுகள் :-
மக்கள் இனி வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது போராட்டங்கள் அல்லது பேரணிகளை ஏற்பாடு செய்யவோ முடியாது. வேலை நிறுத்தங்கள் மற்றும் பேரணி பேச்சுக்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.போலி பிரச்சாரம், கருத்துகள் வெளியிடுவது, தவறான தகவல் பரப்புவது தண்டனைக்குரியவையாகும்.
மருத்துவர்களுக்கான மற்றும் மருத்துவத்துறைக்கான கட்டுப்பாடுகள் :-
அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் உட்பட மற்ற மருத்துவ பணியாளர்கள் (பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) 48 மணி நேரத்திற்குள் மருத்துவத் துறைக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் உண்மையாக வேலை செய்ய வேண்டும் மற்றும் தொடர்புடைய அதிகாரத்தின் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மறுப்பவர்கள் அல்லது மீறுபவர்கள் இராணுவச் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.