2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவீந்திரன் நாராயணன் ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.அதனடிப்படையில், நேற்று சட்டசபை கூட்டம் நடைபெறவிருந்த கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தார் ஆளுநர் ரவி.
இதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது, இதனை தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட சட்டசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.
ஆளுநர் உரையாற்றிய பின்னர் ஆளுநர் உரை தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வழங்கினார், அதன்பிறகு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நோய்த்தொற்று பரவலை கருத்தில்கொண்டு இரண்டு நாட்கள் மட்டுமே பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் உரையாற்றிய சபாநாயகர் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றார்கள். இதில் ஜனவரி மாதம் 7ம் நாளைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடங்கப்பட்டு விவாதம் நடைபெறும், நாளை மறுநாள் முதல்வரின் நிறைவுரை உடன் சட்டப்பேரவை நிறைவு பெறும். இந்த இரண்டு நாட்கள்தான் சட்டப்பேரவை நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.
கேள்விகள் மற்றும் விடையுடன் சட்டப்பேரவை நிகழ்வு ஆரம்பமாகும், இதனை நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதலமைச்சரின் உரையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்காக தான் நாங்கள் முயற்சித்து வருகிறோம், ஆனால் சோதனை முறையில் நாளைய தினம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதோடு ஆளுநர் ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்துடன் உரையை முடித்து இருக்கின்றாரே என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் தெரிவித்த அவர் அதில் என்ன தவறு இருக்கிறது? இந்தியா வாழ்க என்று தெரிவித்தால் குற்றமா? நான்கூட நன்றி வணக்கம் தெரிவித்தேன். பாரதியார் பாடலிலேயே பாரத நாட்டுக்கு நன்றிதெரிவித்து இருக்கிறோமே, நாம் எல்லோரும் இந்தியர்கள் இதில் எந்தவிதமான மாற்றமும் கிடையாது. தமிழன் என்பது அடையாளம் இதில் தவறு இல்லையே ஜெய்ஹிந்த் யாரும் பேசவே கூடாது என்று யாரும் சட்டம் போடவில்லையே என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து சட்டசபை உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து இரண்டு நாட்கள் மட்டுமே பேரவை கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்ற முடிவை மேற்கொண்டோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
நோய்தொற்று பாதிப்பால் பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் பிரபாகரன், அறந்தாங்கி சட்டசபை உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.