தங்க ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் தவிர ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவதாக கோல்ட்சிக்கா நிறுவனம் கூறியுள்ளது.
இன்றைய வேகமான உலகில் மக்களுக்கு ஏற்ப தொழில்நுட்பத்திலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகிறது, அந்த தொழிநுட்ப முன்னேற்றங்களில் ஒன்றுதான் ஏடிஎம் மையங்கள். இன்றைய சூழலில் ஏடிஎம்கள் ஒருவரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றே கூறலாம். இதுவரை ஏடிஎம் மையங்களை நாம் பணம் எடுப்பதற்கும், பணம் போடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் இப்போது அதில் தங்கத்தை பெறும் அளவிற்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது. சமீபத்தில் பெங்களூரில் செயல்படுத்தப்பட்ட இட்லி வழங்கும் ஏடிஎம் கவனத்தி ஈர்த்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் தங்கத்தை தரக்கூடிய ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உலகின் முதல் தங்க ஏடிஎம் வசதியை பெற்ற நாடு என்கிற பெருமை இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. தங்கம் வாங்குதல் மற்றும் விற்பதில் நிபுணத்துவம் பெற்ற கோல்ட்சிக்கா நிறுவனம் தான் ஹைதராபாத்தில் முதல் தங்க ஏடிஎம்மை அறிமுகப்படுத்தியது, இந்த ஏடிஎம் மூலம் மக்கள் நகைக்கடைக்குச் செல்லாமல் தங்கம் வாங்க முடியும். 24×7 இயங்கும் இந்த ஏடிஎம்-ல் விரும்பும் பட்ஜெட்டுக்குள் தங்கம் வாங்கிக்கொள்ளலாம் மற்றும் இந்த ஏடிஎம் அமைத்ததன் முக்கிய நோக்கம் தங்கத்தை மிகக் குறைந்த விலையில் வழங்குவது தான் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஏடிஎம்-ல் தங்கத்தை வாங்க டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைத் தவிர ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு ஸ்மார்ட் கார்டுகளை வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது. இதன் செயல்பாடு மற்ற ஏடிஎம்களைப் போலவே தான் உள்ளது, தங்கத்தை வாங்குவதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு கிரெடிட் அல்லது டெபிட் கார்டை ஸ்வைப் செய்ய வேண்டும். நீங்கள் உள்ளிட்ட தொகைக்கு ஏற்ப உங்களுக்கு தங்கம் கிடைக்கும். இங்கு 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையிலான மதிப்புகளில் தங்கத்தை பெறலாம் மற்றும் இந்த அளவுக்கு மேல் தங்கத்தை வாங்க முடியாது.