கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க ஆன்மீகம் சொல்லும் வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள்..!!

Photo of author

By Janani

கோபம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க ஆன்மீகம் சொல்லும் வழிமுறைகள் மற்றும் பரிகாரங்கள்..!!

Janani

வாழ்க்கையில் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி, பிரச்சனைகள் உள்ளது. இதனால் கோபம் கொண்டு பல விதமான உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகிறது. இவற்றில் இருந்து விடுபட ஆன்மீகத்தில் சில வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

டென்ஷன் இல்லாத அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? தினசரி வாழ்க்கையில் எந்த மாதிரியான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்தக் கலியுகத்தில் அனைவருமே ஏதேனும் ஒரு பிரச்சனையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற துன்பங்களுக்கு கர்மாக்கள் காரணமாக சொல்லப்படுகின்றது. பலவிதமான பிரச்சனைகளால் பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

இதிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மீகம் சில எளிமையான வழிகளை காட்டுகிறது. இதை தினசரி வாழ்வில் தொடர்ந்து கடைபிடித்து வந்தாலே டென்ஷன் இல்லாத நிதானமான, அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். ஆன்மீகத்தில் மொத்தம் பத்து வழிகள் கூறப்பட்டுள்ளது, அவற்றை தற்போது காண்போம்.

1. தந்தை சிவபெருமானை பற்றி மகிழ்ச்சியாக ஒலிக்கும் பாடல்களை கேளுங்கள். மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு நல்ல வார்த்தைகளை பிறருக்கு மனதார சொல்லுங்கள். பிறரைப் பற்றி குறைகள் பேசும் இடத்தில் கலந்து கொள்ளாதீர்கள்.

2. தவறானவற்றை காது கொடுத்து கேட்காதீர்கள். பிறர் உங்கள் மனதை நிலை குலைய வைத்தால் எதுவும் பேசாமல் அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். அது உங்கள் மூத்த அதிகாரியாக இருந்தால் உங்கள் மனதில் இறைவனை நினைத்துக் கொள்ளுங்கள்.

3. எதற்கும் கவலைப்படாதீர்கள். கவலைப்படக் கூடிய சூழ்நிலையாக இருந்தாலும் சரி, எல்லா பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அமைதியாக அந்த சூழ்நிலையை கடந்து செல்லுங்கள். எல்லாம் தன்னுடைய விருப்பம் படி நடக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். முதலில் பிறருக்கு விருப்பமான முறையில் நான் நடக்கின்றேனா என்பதை சுய சோதனை செய்யுங்கள்.

ஒருவேளை உங்கள் செயல்கள் பிறருக்கு பிடிக்கவில்லை என்றால், அதை மாற்றிக் கொள்ள முற்படுங்கள். தன்னிடம் உள்ள குறைகளை அமைதியாக சிந்தித்து சீர்திருத்தி கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு பிறருடைய குறைகள் தென்பட்டால் அவருக்காக நல்ல எண்ணம் வையுங்கள். அவர் நல்ல விதத்தில் மாறுவதற்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

4.மனதிற்கு அமைதியான இசையை கேளுங்கள். ஒருபோதும் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளை திரும்பத் திரும்ப அசை போடாதீர்கள். உங்களிடம் யாராவது உங்கள் உணர்வுகளை தூண்டும் படி, ஆவேசம், கோபம் படும்படி பேசினால் அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். அவர் மனதில் உள்ள ஆவேசமும், கோபமும் நீங்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த சூழ்நிலையை குப்பை என்று நினைத்து மனதை விட்டு தூக்கி எறிந்து விட வேண்டும்.

5. எல்லாம் ஒரு நாள் அழியக்கூடியது. கோபம் கொண்டவனுக்கும் ஒரு முடிவு வரும். அமைதியாக இருந்தவனுக்கும் ஒரு முடிவு வரும். எல்லாம் சிறிது கால நேர ஆட்டம் தான். அந்த ஆட்டத்தை அன்புடன் நிறைவு செய்யுங்கள். சூழ்நிலையை அன்பாக கடப்பது தான் மனிதனுக்கும், விலங்குக்கும் உள்ள வேறுபாடு.

6. நினைப்பது அனைத்தும் நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். நடந்தால் நன்மைக்கு நடக்கவில்லை என்றால் அதுவும் ஒரு நாள் நன்மைக்கே என்று தெரிய வரும். அதனால் எல்லாவற்றிலும் நன்மையே என்று ஆனந்தம் கொள்ளுங்கள்.
முடிந்தவரை மௌனமாக இருக்க பழகுங்கள். தேவையான சொற்களை மட்டுமே பேசுங்கள். பிறர் குப்பைகளை போட நீங்கள் குப்பைத்தொட்டி இல்லை என்று உணருங்கள்.

7. அன்பே சிவம். ஆங்காரம், கோபம், ஆவேசம், தற்ப்புகழ்ச்சி, குற்றப்பார்வை, குற்றமான எண்ணங்கள், விரோதம், பொறாமை, பொய், சூது, வஞ்சகம், பழிவாங்குதல், தர்மத்தை மீறிய எண்ணங்கள் இவை அனைத்தும் எங்கு இருக்கிறதோ அங்கு கண்டிப்பாக தந்தை சிவன் வாசம் செய்ய மாட்டார். சுயநலமற்ற அன்பை வெளிப்படுத்துங்கள். பிறரின் தவறுக்காக நீங்களும் தவறு செய்து உங்களை தண்டித்துக் கொள்ளாதீர்கள்.

8. வறட்சியான அமைதியில் இருக்காதீர்கள். ஆனந்தமான அமைதியில் இருங்கள். அந்த மௌனத்தில் ஈசனுடன் இணைந்து இருங்கள். அப்பொழுது உங்கள் முகத்தில் அமைதி வெளிப்படும். அந்த அமைதியை பார்ப்பவர்கள் ஆவேசமாக வந்தாலும் குளிர்ந்து விடுவார்கள். பிறரை குளிர்விக்க நீங்கள் இறைவனுடைய நினைவில் இருந்தால் போதுமானது. ஆன்மீகத்தின் வெளிப்பாடு எப்பேற்பட்டவரையும் அமைதி அடைய செய்து விடும்.

9. எதையும் விரும்பாதீர்கள், எதையும் வெறுக்காதீர்கள். விரும்பிய பொருளால் பற்று ஏற்படலாம். வெறுத்த பொருளால் நிம்மதியை இழக்கலாம். எனவே எல்லாவற்றின் மீதும் சமமான அன்பை வையுங்கள். எங்கே சமநிலை இல்லையோ அங்கே தான் பிரச்சனைக்குரிய விஷயங்கள் உருவாகின்றது.

10. இறைவனின் புகழை மனதில் பாடிக் கொண்டே இருங்கள். மனிதனை புகழுக்கு உரியவனாக உருவாக்கியவர் ஈசனே. அவர் இன்றி அணுவும் அசையாது. எனவே அவரை துணையாக வைத்துக் கொள்ளுங்கள்.
பலவிதமான நோய்கள் மனிதனின் உடலில் வருவதற்கு முக்கியமான காரணமே இந்த டென்ஷன் தான். தினமும் டென்ஷன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், ஆன்மிகம் ரீதியாக ஒரு எளிய பரிகாரம் உள்ளது.

அதாவது இரவு தூங்குவதற்கு முன்பு இந்த தண்ணீரால் முகத்தை கழுவிக் கொண்டு தூங்கினால், நிம்மதியான டென்ஷன் இல்லாத தூக்கத்தை பெறலாம். அடுத்த நாள் காலையும் டென்ஷன் இல்லாத நிம்மதியான விடியற்பொழுதை காணலாம்.

டென்ஷன் இல்லாமல் இரவு நிம்மதியாக தூங்கி எழுந்தாலே போதும். அடுத்த நாள் காலை மன அழுத்தம் இல்லாமல் உங்களுடைய வேலையை தொடங்கலாம். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கும் அந்த குறிப்பிட்ட பிரச்சனையை சரி செய்யவும் இந்த பரிகாரம் உதவி செய்யும்.

டென்ஷன் குறைய பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு உங்களுக்கு தேவையான பொருள் ஒரு கண்ணாடி டம்ளர். அது நிரம்ப கொஞ்சம் நல்ல தண்ணீர் தேவை. குடிக்கின்ற தண்ணீராக பயன்படுத்தவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பு போட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கண்ணாடி டம்ளரை உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுடைய வாழ்க்கையில் டென்ஷனை கொடுக்கக்கூடிய பிரச்சனைகளுள், ஏதேனும் ஒரு முக்கியமான பிரச்சனையை எடுத்துக் கொள்ளுங்கள். டென்ஷன் தரக்கூடிய பிரச்சனை நிறைய இருக்கும். ஒவ்வொன்றாக சரி செய்வோம். முதலில் உங்களுக்கு தலை பாரத்தை தந்து கொண்டிருக்கும் பிரச்சனையை உங்களுடைய வேண்டுதலில் வைக்கவும்.

இப்பொழுது தயார் செய்து வைத்திருக்கும் இந்த தண்ணீர் டம்ளரை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, உங்களுடைய பிரச்சனையை நினைத்து இந்த பிரபஞ்சத்திடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் உங்களுடைய மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுடைய வேண்டுதலை வையுங்கள். குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த தண்ணீரைக் கொண்டு உங்கள் முகம், கை, கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள். ஒரு பெரிய ஜக்கில் உங்கள் முகம் கழுவ சாதாரண தண்ணீரை எடுத்துக்கொண்டு, அந்தத் தண்ணீரில் இந்த உப்பு தண்ணீரை கலந்தும் முகம், கை, கால்களை கழுவிக் கொள்ளலாம். தவறு கிடையாது.

இப்படி இந்த தண்ணீரில் முகத்தை கழுவிக்கொண்டு, துடைத்துவிட்டு தூங்க செல்லவும். தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்துவிட்டு வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. நேரடியாக படுக்கைக்கு தூங்க செல்லுங்கள். நிம்மதியான தூக்கம் வரும். அந்த டென்ஷன் உங்கள் மனதை போட்டு குழப்பாது.

மறுநாள் காலையில் இருந்து ஏதேனும் ஒரு வகையில் உங்களுடைய பிரச்சனை சரியாவதற்கு உண்டான வழிகள் கிடைக்கும்.
இந்த பரிகாரத்தை உங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து இரவு தூங்குவதற்கு முன்பு இதே பரிகாரத்தை, அந்த ஒரு வேண்டுதலை வைத்தே செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சனை முழுவதுமாக ஒரு சில நாட்களில் சரியாகிவிடும்.