எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடக்கம்! இதற்கு தடை விதிப்பு!!
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி தேர்வு மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி பசவராஜ் கூறுகையில்,
முதலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிய அவர், தேர்வு நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் நாளை (இன்று) எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் எந்தவித பயமும் இன்றி தேர்வு எழுத வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும், மொத்த பாடத்திட்டத்தில் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் 80 சதவீத பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய கர்நாடக அரசு விதித்த தடையை உறுதி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தேர்வு எழுத வரும் மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். இதைமீறி மதத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை அணிந்து வரக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவிகள் பள்ளி வளாகத்திற்குள் ஹிஜாப் அணிந்து வரலாம். ஆனால் வகுப்பிற்குள் வரும்போது ஹிஜாப் அணிய அனுமதி கிடையாது என கூறியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.