கேரள வெள்ளப்பெருக்கு..திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

0
137

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கேரளாவில் இடைவிடாது பெய்த கனமழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையால் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் அணியினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை, கேரளாவில் மழை வெள்ளம் நிலச்சரிவில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது பலர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் வகையில் திமுக அறக்கட்டளை சார்பாக கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை திமுக அறக்கட்டளையின் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும், இந்த பெரு வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்குள்ளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக கழகம் தெரிவித்துக்கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழகத்தில் குழந்தை பெறாததற்கு திமுக தான் காரணம்-ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.!!
Next articleவிஜிலன்ஸ் ரய்டு அதிமுக எதையும் சந்திக்கும்! முன்னாள் அமைச்சர் துணிச்சல் பேட்டி!