ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர்? அடுத்த லோக்சபா தேர்தலுக்கு புதிய வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோர்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர தேர்தல் வியுக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பணியானது முக்கியமானதாக அக்கட்சியினரால் கருதப்படுகிறது.இந்நிலையில் ஸ்டாலினை தேசிய அரசியலில் நுழைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்து நடக்கவுள்ள மக்களவை தேர்தலில்,தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வலிமை சேர்க்கும் வகையில் பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை இந்த கூட்டணிக்கு தலைவராக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய சூழலில் தேசிய அளவில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது உண்மையே. இனியும் காங்கிரஸ் கட்சியை நம்ப யாரும் தயாராக இல்லை என்ற வகையில் தான் கடந்த கால தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.இதையே தான் பிரசாந்த் கிஷோர் கருத்தும் தெரிவிக்கிறது.
அதாவது 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள அடுத்த லோக்சபா தேர்தலில் பலமான எதிர்ப்பு இல்லாமல் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருந்தார். தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஓட்டு வங்கி முழுவதும் ஒரு கூட்டணிக்கே கிடைக்காமல் சிதறி விடுவதால் பாஜக சுலபமாக வெற்றி பெறுகிறது என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இதனால் அதையெல்லாம் சமாளிக்கும் வகையில் மாநில வாரியாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி வியூகம் அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியானது தேசிய அளவில் மட்டுமல்லாமல் மாநில அளவிலும் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியின் தலைமையை ஏற்க பல மாநில கட்சிகளும் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. இதனால், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகள் கொண்ட ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளார்.
அந்த வகையில் இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தேசிவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரை ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இதனைத்தொடர்ந்து, தென் மாநிலங்களில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
‘ஐ.மு., கூட்டணி எங்கே இருக்கிறது’ என, மம்தா எழுப்பி கேள்வியால், சமீபத்தில் சோனியா தலைமையில் ஐ.மு., கூட்டணி கட்சிகளின் கூட்டம் டில்லியில் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், தி.மு.க., – தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு போன்ற கட்சிகள் பங்கேற்றன.ஆனால்,
சோனியா காந்தியின் தலைமையில் டெல்லியில் நடத்தப்பட்ட கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டது பலமாக கருதப்பட்டாலும்,மாநில அளவில் வலுவாக உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் போன்ற கட்சிகள் பங்கேற்காமல் தவிர்த்து பலவீனமாக கருதப்படுகிறது. இதனால் தான் சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது திவாலாகி விட்டது என பாஜக தரப்பில் விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் பாஜகவை எதிர்க்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் புதிய தலைவராக மம்தாவை தேர்ந்தெடுத்தால் காங்கிரஸ் தலைமையை விரும்பாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை உருவாக்க முடியும் என பிரசாந்த் கிஷோர் கருதுகிறார். ஆனால் இந்த திட்டத்திற்கு சோனியா காங்கிரஸ் தரப்பு விருப்பம் காட்டவில்லை. அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைமையை விட்டுக் கொடுக்கவும் சோனியா காந்தி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான் சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் சமரச பேச்சு நடத்தி, மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தொடர்ந்து ஒரு தலைவரே நீடிக்காமல், ஸ்டாலின், சோனியா மற்றும் மம்தா உள்ளிட்டோர் தலா இரண்டு ஆண்டுகள் பதவி வகிக்கலாம் என்ற ஆலோசனையை பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
எனவே இந்த முயற்சியில் சோனியா மற்றும் மம்தா இருவரையும் சந்தித்து பேசி, ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைவராகும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.அதே நேரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஸ்டாலின் தலைவராகும் நிலையில் அவரே அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராகவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.