ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா!

0
163
sterlite
sterlite

ஸ்டெர்லைட்டின் முகமூடி கிழிந்தது! சுயரூபத்தை காட்டிய வேதாந்தா!

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் அதனை சாதகமாக பயன்படுத்தி, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஆக்சிஜனை தங்களது ஆலையில் தயாரித்து இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனம் மனு தாக்கல் செய்தது.

மனிதாபிமான அடிப்படையில் இந்த முடிவு எடுத்ததாகவும், உடனடியாக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வாதிட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனையில் தவிக்கும் மத்திய அரசும், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை தயாரிக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்தது.

ஆனால், அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், தமிழக அரசே ஆலையை இயக்கி ஆக்சிஜனை உற்பத்தி செய்யலாமே! என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதையடுத்து, தூத்துக்குடியில் மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்ற போது, அப்பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தில், ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது, அதே நேரத்தில் தமிழக அரசே எடுத்து ஆக்சிஜனை ம்ட்டும் உற்பத்தி செய்துகொள்ளலாம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி நடந்தால், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை தங்களால் இயக்க முடியாத நிலை ஏற்படும் என்பதை அறிந்த வேதாந்தா நிறுவனம், நேற்று உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தமிழக அரசே ஆலையை எடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

தங்களது தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 3 மாதங்கள் வரை பயிற்சி அளித்த பிறகே ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியதாகவும், ஆனால், தமிழக அரசிடம் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததால், தாங்களே ஆலையை இயக்கி ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

முதலில், மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்து இலவசமாக தருவதாகக் கூறிய வேதாந்தா நிறுவனம், அரசே ஆலையை எடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ளும் நிலை எற்பட்டுள்ளதை அறிந்து, தாங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருப்பதால், ஆலையை இயக்க அவர்கள் போட்ட நாடகம் அம்பலமாகியுள்ளதாக சமூக ஊடங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு, இன்று உச்சநீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் தெரிவிக்கும் போது, ஆலையை தமிழக அரசு எடுத்து நடத்துமா? இல்லை ஆலையை வேதாந்தா நிறுவனம் இயக்குமா? அல்லது ஆலைக்கு அனுமதி கிடைக்காமல் தடை நீடிக்குமா என்பது தெரிய வரும்.

Previous articleதத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்!
Next articleகுறைந்தது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை! காரணம் என்ன தெரியுமா?