வங்கக்கடலில் உருவான புயல் வலுவிழந்ததால் நாளை கரையை கடக்கிறது. இதன் காரணமாக சில மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்தது. அது சூறாவளி புயலாக உருமாறி தமிழகத்தின் கடலோரப் பகுதிகளை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கு பெங்கல் என பெயரிடப்பட்ட நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறாமல் வலுவிழந்தது.
இந்த சூழ்நிலையில் வலுவிழந்த தீவிர காற்றழுத்த மண்டலம் நாளை சனிக்கிழமை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதியில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால் அந்த மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. கனமழை பெய்ய இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அடுத்ததாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை சனிக்கிழமை என 2 நாட்கள் தொடர் விடுமுறை அந்த மாநிலத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.