ஸ்பெயின் நாட்டில் கடந்த சில நாட்களாக குளோரியா என்ற புயல் கடுமையான தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டின் கேட்டலோனியா கடற்கரை பகுதியில் உள்ள நகரம் ஒன்று இடுப்பளவிற்கு கடல் நுரையால் சூழப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குளோரியா புயலை அடுத்து கேட்டலோனியா பிராந்தியத்தில் கனமழை விடாது பெய்து வரும் நிலையில் திடீரென அந்த பகுதியின் கடற்கரையில் இருந்து திடீரென ஏராளமான கடல்நுரை நகருக்குள் வந்தது.
கடல் நுரை நகருக்குள் சூழ்ந்ததால், பொதுமக்கள் தெருவில் இறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கட்டிடத்தின் சுவர்களில் பல மீட்டர் உயரத்திற்கு, சிமெண்டு பூச்சுபோன்று கடல் நுரை ஒட்டியுள்ளது பார்ப்பதற்கே பயக்கரமாக உள்ளது. கடல் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றத்தினால் இந்த நுரை உருவாகியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த நுரையால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது என்றும், நுரையில் உள்ள பாசியின் அளவைப் பொருத்து, அவை காற்றில் பரவும் நச்சுகளை வெளியிடலாம் என்பதால், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படும் என அமெரிக்க தேசிய பெருங்கடல் சேவை நிறுவனம் கூறி உள்ளது.