சென்னையில் இருக்கின்ற குருநானக் கல்லூரியின் 50ம் ஆண்டு பொன்விழா இன்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது நோய் தொற்றால் என்னுடைய தொண்டை பாதிக்கப்பட்டிருக்கிறது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தால், என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நடைபெற்ற சில சம்பவங்கள் என்னை மன வேதனையடைய செய்திருக்கின்றன. பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடைபெற்றால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவிகளுக்கு உடல் ரீதியாக இழிவு செயல் நடைபெற்றால் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதேபோல குற்றவாளிகளுக்கு நிச்சயமாக தண்டனையும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேச வேண்டும், படிப்போடு கல்வி முடிந்து விடுவதில்லை, பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிவடைந்து விடாது, கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணம் வரவே கூடாது மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனைகளை கைவிட்டு உயிர்ப்பிக்கும் சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளை பார்த்துக் கொண்டு அரசு அமைதியாக இருக்காது என தெரிவித்துள்ளார்.