விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிபார்ம் தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் நன்றாக படிக்கும் மாணவர்களை விட படிக்காத மாணவர்கள் 4 பேர் 56% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இதனால் சந்தேகமடைந்த பிற மாணவர்கள் சம்பந்தப்பட்ட அந்த 4 மாணவர்களின் விடைத்தாளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாங்கி பார்த்துள்ளன. அதில் அவர்கள் விடைகளுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், ஜெய் பஜ்ரங்பலி போன்ற வாசகங்களை மட்டும் எழுதி விடைத்தாள் பக்கங்களை நிரப்பி வைத்துள்ளனர்.
இவர்களில் ஒரு மாணவர் மட்டும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை வரிசையாக எழுதி வைத்திருந்தார். இதனை கண்டு பிற மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து முன்னாள் மாணவர் திவ்யான்ஷு சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழக துணைவேந்தர் வந்தனா சிங் விசாரணை நடத்தினார்.
அதில், வினய் வர்மா மற்றும் ஆஷிஷ் குப்தா என்ற இரண்டு பேராசிரியர்கள் மாணவர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உடனடியாக அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்ததோடு, சம்பந்தப்பட்ட மாணவர்களையும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் இருவரும் ஏற்கனவே மாணவர்களை தேர்வில் காப்பி அடிக்க அனுமதித்தாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.