அதிமுகவில் சடுகுடு! திக்குமுக்காடும் தலைவர்கள்! கலக்கத்தில் தொண்டர்கள்!
தற்போது அதிமுகவில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு தலைவர்களுக்கும் உட்கட்சி பூசல் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றது. யார் பொறுப்பு ஏற்பார்கள்? யார் தலைவர் பதவியில் வகிப்பார்கள் என்ற வகையிலேயே அந்த சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நான் தான் பெரியவர், நானே பெரியவர் என்று வாக்கு வாதங்களும் நடைபெறுகின்றன. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 16ம் தேதியன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து மறுநாள் 17ம் தேதி எம்ஜிஆர் வாழ்ந்த சென்னையின் வீட்டில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அவருக்கு மரியாதை செய்து அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலாவின் பெயரில் ஒரு கல்வெட்டும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் கொடியை ஏற்றியவர் என்று சசிகலாவின் பெயரும், கழக பொதுச்செயலாளர் அவர்தான் என்றும் பொறிக்கப்பட்டிருந்தது.
அது அதிமுகவின் நிர்வாகிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சென்னை ராமாபுரம் விழாவில் பேசிய சசிகலா, அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும், என்றும் நாம் ஒன்றாக இருக்கவேண்டும் மேலும் அதிமுக வென்றாக வேண்டும் என பல தத்துவங்களை பேசி தொண்டர்களை கவர்ந்து இழுத்தார். அவர் பல பொன்மொழிகளை எடுத்துக்காட்டாக கூறினார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் சசிகலா மீது கடுமையாக விமர் சனத்தை வெளியிட்டார். கல்வெட்டில் அவரே அவர் பெயரை போட்டுக் கொண்டால் பொதுச்செயலாளர் ஆகிவிடுமா? என்றும், அதைத் தொடர்ந்து அவர் மீது காவல் நிலையத்தில் ஆணையரிடம் புகார் மனு ஒன்றையும் அமைச்சர் அளித்தார். சசிகலாவின் பேச்சு குறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை என்று கூறி அதோடு முடித்து விட்டார்.
மேலும் அவரை மிகக் கடுமையாக சாடியும் இருந்தார். இதனால் சசிகலாவின் தூது எதுவுமே அதிமுக தலைவர்கள் மத்தியில் செல்லப் போவதில்லை என்றும் பல தகவல்கள் மக்களால் பேசப்பட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அளித்த பேட்டி ஒன்று அதிமுக வட்டாரத்தில் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறும்போது அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவுகளை எடுப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
மேலும் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்களை ஏற்றுக் கொள்வது மக்களின் விருப்பம்தான் என்றும் முகத்தில் அறைந்தாற்போல் கூறியிருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே கடந்த 4 ஆண்டுகளாக அதிமுக செயல்பட்டு வந்ததாகவும் கூறினார். இவர் பேட்டியை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
சசிகலாவுடனும், அவரை சார்ந்தவர்களுடனும் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என ஒரு காலத்தில் கூறினார் ஓ..பன்னீர் செல்வம். சசிகலா அவர்களையெல்லாம் எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியுள்ளார். பன்னீர்செல்வம் பேசியதை முழுமையாக பார்த்துவிட்டுத்தான் நான் விளக்கம் அளிக்கிறேன். மேலும் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏற்கனவே அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் நினைவு கூர்ந்தார்.
அதில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் கையெழுத்திட்டு உள்ளோம் என்றும் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கக் கூடாது எனக் கூறியவர் என்றும் தெரிவித்துள்ளார். சசிகலா விவகாரத்தில் அதிமுகவில் தலைவர்களின் மாறுபட்ட கருத்து தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.