சப் இன்ஸ்பெக்டர் இடை நீக்கம்! தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் எஸ்பி அதிரடி!
தேசிய கீதம் பாடப்பெறும் பொழுது மரியாதை செலுத்தாமல் உட்கார்ந்து செல்போன் பேசிய சப் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 28ஆம் தேதி அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பெற்றது.
அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எழுந்து நின்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கலைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தேசிய கீதத்தை மதிக்காமல் நாற்காலியில் அமர்ந்தபடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் போன் பேசி முடித்துவிட்டு சாவகாசமாக எழுந்து நின்றார்.
சப் இன்ஸ்பெக்டரின் இந்த மரியாதை குறைவான செயலை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் மிகவும் பரவலானது. ஒரு பொறுப்புள்ள காவல்துறை பதவியில் இருப்பவர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து தேசிய கீதத்தை மதிக்காத சிவப்பிரகாசம் மீது புகார்கள் எழுந்ததை எடுத்து அவரை இடைநீக்கம் செய்து மாவட்ட எஸ்பி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்புக்குள்ளானது.