வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரம் செய்யாத அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளகள் மீதான குற்றவழக்குகளை நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் இணையதளத்திலும் அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இது பின்பற்றப்படவில்லை என புகார் எழுந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், விதிகளை பின்பற்றாத தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 5 லட்சம் ரூபாயை தண்டமாக விதித்தது. இதேபோன்று பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், மக்கள் ஜனசக்தி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதே போன்று, மற்ற மாநிலங்களிலும் நடவடிக்கை எடுத்தால் அனைத்து கட்சிகளுக்கும் நீதிமன்றம் அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படும். அதனால், அரசியல் கட்சிகள் குறைந்தபட்சம் தங்களது வேட்பாளர் தேர்வை சரியாக செய்தால் இது போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் இருக்கலாம். இல்லை என்றால், குற்ற பின்னணி குறித்து தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
ஆனால், இதை அரசியல் கட்சிகள் கேட்குமா என்றால் அது கேள்விக்குறியே! இருந்தாலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளகள் மீதான குற்றவழக்குகளை நாளேடுகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டும், அரசியல் கட்சிகளின் இணையதளத்திலும் அந்த விவரங்கள் இடம்பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.