வார்னரின் அனைத்து புதிய வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தம்!

Photo of author

By Parthipan K

வார்னரின் அனைத்து புதிய வணிகங்களும் தற்காலிகமாக நிறுத்தம்!

கடந்த 24-ந் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கிய ரஷிய ராணுவம் இரண்டு வாரங்களை கடந்தும் உக்ரைன் மீதான போரை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டே வருகிறது. பல உலக நாடுகள் வலியுறுத்தியும் உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்த ரஷ்யா முன்வரவில்லை.

இதன் காரணமாக, ரஷியாவின் மீது பல உலக நாடுகள் பொருளாதார தடை விதித்து வருகின்றன. மேலும், பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ரஷியாவில் நடத்தி வந்த தங்களுடைய வர்த்தகத்தை நிறுத்தி உள்ளன. அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களான பெப்சி, கோகோ கோலா, மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியவை ரஷியாவில் தங்களின் வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அடுத்தடுத்து அறிவித்தன.

அதன் தொடர்ச்சியாக தற்போது, வார்னர்மீடியா ரஷியாவில் அனைத்து புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில்,

“இந்தச் சூழலை நாங்கள் உன்னிப்பாகப் கவனித்து வருகிறோம். சூழலைக் கருத்தில் கொண்டு எதிர்கால வணிக முடிவுகள் எடுக்கப்படும். இந்த நேரத்தில் எங்கள் எண்ணங்கள் உக்ரைன் மக்களுடன் உள்ளன. எங்கள் சேனல்களின் ஒளிபரப்பு மற்றும் ரஷிய நிறுவனங்களுடனான அனைத்து புதிய உரிமம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்துகிறோம் என்றார்.”

இது அமெரிக்க நாட்டு வார்னர்மீடியா ஸ்டுடியோஸ் & நெட்வொர்க்குகள் குழுமத்திற்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக திரைப்பட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ரஷியாவில் ஏற்கனவே “தி பேட்மேன்” திரைப்படத்தை வெளியிடும் திட்டத்தை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.