விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன்

Photo of author

By Parthipan K

விளையாட்டாக மாணவர்கள் செய்த காரியம்! உடனடியாக களமிறங்கிய வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது சொந்தப் செலவில் அரசுப்பள்ளிகளுக்கு மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இவர் ஆய்வுக்கு சென்ற போது, ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார் என மாணவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக ஃபேன் வாங்கிக் கொடுத்து அதை வகுப்பறைகளில் பொருத்தி மாணவர்களுக்கு வேல்முருகன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இது போன்ற சாதனங்களை கொள்முதல் செய்ய வழிவகை இல்லை என்பதால் சொந்தப் பணத்தில் வாங்கி கொடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன், ஊரில் இருக்கின்ற போதெல்லாம் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொள்வார். குறிப்பாக அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்வதை தனது வழக்கமான பணிகளில் ஒன்றாக செய்து வருகிறார்.

அந்த வகையில் திருவதிகையில் இயங்கி வரும் பண்ருட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு 2 நாட்களுக்கு முன்னர் ஆய்வு சென்ற வேல்முருகன் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதே போல் மேல்பட்டாம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு நடத்திய வேல்முருகன், வகுப்பறைகளில் மின் விசிறிகள் இல்லாததையும், மின்விளக்குகள் பழுதடைந்திருப்பதையும் கண்டுள்ளார். அதோடு அவர் மாணவர்களிடம் கலந்துரையாடிய போது ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார் என மாணவர்கள் விளையாட்டாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து வேல்முருகன் தனது சொந்த செலவில் உடனடியாக அரசு பள்ளிகளுக்கு தேவையான மின் விசிறிகளையும் மின் விளக்குகளையும் வாங்கி அதை தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கி அரசுப் பள்ளிகளில் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மாணவ மாணவிகள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துக்கொண்டர். கோடைகாலம் தொடங்கவுள்ள நிலையில் மின்விசிறி பொருத்தப்பட்டது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.