தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

Photo of author

By Anand

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிசிசிஐ தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசனின் மகளுமான ரூபா, பிசிசிஐ மாநில பிரிவின் முதல் பெண் தலைவர் ஆக பதவி ஏற்றுள்ளார்.

இன்று(செப்டம்பர் 26) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ) 87 வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், முன்னாள் பிசிசிஐ தலைவர் என்.ஸ்ரீநிவாசனின் மகளும், குருநாத் மெய்யப்பனின் மனைவியுமான ரூபா குருநாத் மாநில வாரியத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மாநில பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுகிறார் ரூபா.

லோதா கமிட்டி பரிந்துரையின்படி, இந்திய கிரிக்கெட் வாரியத்திலும், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகத்திலும் பல சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவியில் இருக்கக்கூடாது; தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தால் அடுத்து ஒரு இடைவெளி விட்டு தான் மீண்டும் பதவிக்கு வர முடியும்; ஒரே நேரத்தில் ஒருவர் இரண்டு பதவி வகிக்கக்கூடாது ஆகியவை லோதா கமிட்டி பரிந்துரையின்படி முக்கியமானதாகும்.

இந்த புதிய விதிமுறைகளின்படி, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிர்வாகிகள் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 6 முக்கிய பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன்(செப்.25) முடிவடைந்தது. அதில் முன்னாள் சங்க தலைவர் ஸ்ரீநிவாசனின் மகள் ரூபா குருநாத்துக்கு எதிராக வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் பெயரிடப்படாத அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, டி.என்.சி.ஏ சமீபத்தில் தலைப்புச் செய்தியானது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ரூபா குருநாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ரூபா குருநாத் , 2013ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஸ்பாட் பிக்ஸிங் ஊழலில் ஈடுபட்டதற்காக தடைக்கு உள்ளாகியிருக்கும் குருநாத் மெய்யப்பனின் மனைவி ஆவார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகினார். பின் குருநாத் பிணையில் விடுதலையான பிறகு, மீண்டும் ஸ்ரீநிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரானார். அதன் பின், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.யின்) அவைத் தலைவராக ஸ்ரீநிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.