பெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு

Photo of author

By Jayachandiran

பெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு

காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலத்தை சட்டமாக அறிவித்துள்ள நிலையில், நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்த பெட்ரோலிய மண்டலம் ரசாயன மண்டலம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் வேளாண் செழிப்பு பகுதிகளான காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக சேலத்தின் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் நேரடியாக சென்று தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதலும் சட்டசபையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு சட்டமசோதாவையும் தாக்கல் செய்தார். இதற்கான பணிகளை கவனிக்க அதிகார அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பின்னர் இதற்கான ஆளுநர் ஒப்புதலும் கிடைத்துவிட்ட நிலையில் டெல்டா பகுதியில் புதிய திட்டங்கள் தொடங்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி தொடங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டமசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு வேளாண் மண்டல மசோதா குறித்த அரசாணையும், அதோடு சேர்த்து நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க வழங்கிய அரசாணையை ரத்து செய்தும் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராம பகுதிகளில் பெட்ரோலிய ரசாயனம், பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்காக தமிழ்நாடு நகர மற்றும் திட்ட சட்டத்தின் வழியாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரசாயன மண்டலம் உருவாக்க வழங்கப்பட்ட அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.