வரும் மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் நேற்று மருத்துவக் குழுவினருடன் முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
முதல்வர் தலைமையில் நேற்று காலை 11.30 முதல் 1 மணி வரை
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் பிரப்தீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்டோர் குழுவினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா தோற்று அதிகமாகி கொண்டிருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கை மே 31 ஆம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்கள் வரை நீட்டிக்கலாமா அல்லது ஊர டங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ளலாமா? பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா என்பதுக் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்கனவே உள்ள நோய்களை கண்டறிந்து இறப்பை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், முக்கியமாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் வராமல் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அக்கூட்டத்தில் கலந்துகொண்ட நிபுணர்கள் மே 31 ஆம் தேதிக்கு பிறகு பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிப்பதன் மூலம் நோய் தீவிரம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு அரசுக்கு எச்சரித்துள்ளனர்.
மேலும் கூட்டத்தில் பேசிய மருத்துவர்கள் பலர், ‘தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்’ என்றே அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாவட்ட அவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் மேலும் 14 நாட்களுக்கு நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் நோய் தொற்று இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுக்கு வரவும் குறைந்த எண்ணிக்கையில் பொது போக்குவரத்துக்கள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.