ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை தான் தமிழக அரசு காக்கிறது மக்களின் உயிரை அல்ல – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!!
ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல உயிர்கள் பலியான நிலையில் இதற்கு தடை சட்டத்தை கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து அகிலந்த விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்யும்படி கூறியது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இதனை முழுமையாக ரத்து செய்ய முடியாது அதற்கு மாறாக திறமையின் பேரில் விளையாடப்படும் போட்டிகளுக்கு இந்த சட்டம் செல்லாது என்று கூறி உத்தரவிட்டனர்.
அதனடிப்படையில் ரம்மி மற்றும் போக்கர் போன்றவை இதன் கீழ் வராது. இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி பலமுறை ஆளுநருக்கு மசோதா அனுப்பியும் ஒப்புதல் வழங்கவில்லை. கடந்த பத்தாம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது வரை இந்த ரம்மி போக்கரை ஆப்கள் மூலம் உயிரிழப்புகள் நடந்த வண்ணமாக தான் உள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ராமையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர் ராமையா புகலா அவரது சொந்தப் பணம் பல லட்சத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். அந்தப் பணத்தை மீட்க வேண்டும் என்ற வேகத்தில் அவருடன் பயிலும் மாணவர்களிடம் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி அதையும் சூதாட்டத்தில் இழந்துள்ளார். கொடுத்த பணத்தை மாணவர்கள் மீண்டும் கேட்கத் தொடங்கிய போது தான் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தாம் எந்த அளவுக்கு அடிமையாகியுள்ளோம்; எவ்வளவு பணத்தை இழந்துள்ளோம் என்பது ராமையாவுக்கு தெரியவந்துள்ளது. ஆனாலும், ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து விடுபட முடியாததாலும், வாங்கிய கடனை அடைக்க முடியாததாலும் அவர் தமது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்களில் பலரின் வாழ்க்கை இவ்வாறு தான் தொலைகிறது.
https://x.com/draramadoss/status/1791712447524737194
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் , ரம்மி, போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியுள்ள ஒன்பதாவது உயிர் ராமையா ஆவார். கடந்த 14-ஆம் தேதி தான் மாங்காட்டைச் சேர்ந்த சீனிவாசன் என்ற தனியார் நிதிநிறுவன பணியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த மூன்றாவது நாளில் அதே காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு உயிர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகியிருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்தே அத்தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்திற்கான கோடை விடுமுறை தொடங்கி விட்ட நிலையில் அடுத்த இரு மாதங்களுக்கு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை.
இதை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டிய தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கத் துடிக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. ஆன்லைன் சூதாட்ட அரக்கனின் பிடியிலிருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வை அணுகியாவது வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவான சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.