தமிழகம், புதுவை: தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 10-ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வானிலை மையம் அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளது.
“கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் (4-1-2025) நாளையும் (5-1-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல், கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் வரும் 10ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது”.
சென்னையில் பனிமூட்டம் காணப்படும்
“சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (4-1-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்”.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
“தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது”.