தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு மக்கள்நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.
பணி பாதுகாப்பு கோரியும், உரிய ஊதியம் வேண்டியும் போராடும் மக்கள்நலப் பணியாளர்களை, பணிநிரந்தரம் செய்ய மறுக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. வாழ்வாதார உரிமைக்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், மக்கள் நலப் பணியாளர்களை இரு திராவிட அரசுகளும் தொடர்ந்து அலைக்கழிப்பது மிகுந்த வேதனைக்குரியது.
கடந்த 1990ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளில் பொது நலப்பணிகளைப் புரிவதற்கு ஏறத்தாழ 25,000 பணியாளர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்ட மக்கள்நலப் பணியாளர்கள், அதிமுக ஆட்சி அமையும் ஒவ்வொரு முறையும் பணி நீக்கம் செய்யப்படுவதும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது பணி நியமனம் செய்யப்படுவதும் என, மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளினால் மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வே முற்றாகச் சீரழிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பணி கிடைக்குமா என்பதும் தெரியாமல், வேறு பணிகளுக்கும் செல்ல முடியாமல், வாழ்வாதாரத்தை இழந்து, கடந்த 30 ஆண்டுகளாக மக்கள்நலப் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகித் தவித்துவருகின்றனர். திராவிட அரசுகள் தங்களுக்கு இழைத்த அநீதிக்கு எதிராக அம்மக்கள் தொடுத்த வழக்கில், நீண்ட சட்டப்போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. ஆனால் அப்போதையை அதிமுக அரசு அதனைச் செய்ய மறுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மக்கள் நலப்பணியாளர்களின் வயிற்றில் அடித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது மக்கள் நலப்பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதியளித்து மீண்டும் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், முந்தைய அதிமுக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கை விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்தி பணிநிரந்தரம் செய்ய மறுப்பதோடு, தற்காலிக பணியாளர்களாகப் பணிபுரிய தொகுப்பூதியமாக மாதம் 7500 ரூபாய் மட்டுமே வழங்க முடியும் என்று அறிவித்திருப்பது மக்கள் நலப்பணியாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும். திராவிடக் கட்சிககள் தங்களுக்குள்ளான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அப்பாவி ஏழை மக்களின் குடும்பங்களை வறுமையில் தவிக்க விடுவது ஏற்கமுடியாத பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாடு அரசு மக்கள் நலப் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்!https://t.co/lwIhV2r1Fh@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/npp3esKVHZ
— சீமான் (@SeemanOfficial) September 20, 2022
ஆகவே, இனியும் காலதாமதம் செய்யாமல், மக்கள் நலப்பணியாளர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி அவர்களைக் காலமுறை ஊதிய பணியாளர்களாகப் பணிநிரந்தரம் செய்து, தகுந்த இழப்பீடு மற்றும் ஊதியம் வழங்கவும் அரசாணை வெளியிட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.