வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், கன்னியாகுமரி, ஈரோடு, வேலூர், சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய இரு மாவட்டங்களில் மிக கனமழையும், ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், தர்மபுரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தகுதி பகுதி உருவாகியுள்ளதால், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வடக்கு ஆந்திரா ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.