2022 -23 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரையில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், இந்த வருடத்திற்கான 2வது சட்டப்பேரவை கூட்டத்துடன் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான இன்று ஆரம்பமாகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை மிகப் பெரிய சர்ச்சை என்ற நிலைக்கு வந்து தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன ஆகவே சட்டப்பேரவை குழுக்களை மாற்றுவது குறித்து மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் எனவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கலந்தாலோசிக்காமல் எந்தவிதமான முடிவும் மேற்கொள்ளக்கூடாது எனவும் இரு கடிதங்கள் பன்னீர்செல்வம் தரப்பிடம் இருந்து சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகாரம் வழங்கி அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமியும் கடிதங்களை வழங்கியுள்ளார்.
இதில் சபாநாயகர் என்ன விதமான வடிவங்களை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை தலைவராக பன்னீர் செல்வமும் ஒன்றாக அமரும் இடத்தில் இருக்கின்ற இருக்கை மாற்றப்படுமா? என்று கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், சபாநாயகர் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு புறம் இருக்க தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையிலும் சசிகலா, மருத்துவர் சிவகுமார் உள்ளிட்டோரிடம் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த இரண்டு அறிக்கைகளும் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்படுவதற்கான வாய்ப்பு ள்ளது என்பதால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.