டாஸ்மாக் வழக்கில் பலதரப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி சாதித்து காட்டிய தமிழக அரசு! நடந்தது என்ன?

Photo of author

By Ammasi Manickam

தமிழகத்தில் வரும் மே 17 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆளும் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்த நிலையிலும் டாஸ்மாக் கடைகளை எப்படியாவது திறக்க வேண்டும் என்று போராடிய தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்த விசாரணையின் போது நாட்டின் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்லடங்களில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்று இருக்கும் மகாராஷ்டிராவில் கூட மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் மட்டும் ஏன் மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல கேள்விகள் வைக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கிற்காக தமிழக அரசு சில முக்கியமான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளது. அதில்,குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் போதிய சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது. மக்களுக்குள் சமூக இடைவெளி விடப்பட்டது. அரசின் பொருளாதார தேவைக்காக மதுக்கடைகளை திறப்பது அவசியம். மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் வழங்கிய அனைத்து விதிகளும் இதில் பின்பற்றப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளிலும், சென்னையிலும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல முக்கிய வாதங்கள் வைக்கப்பட்டது

பாமக,தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளே கடுமையாக எதிர்த்த நிலையில் டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு பெற்ற வெற்றியானது சட்ட ரீதியான வெற்றி என்பதை விட ஆளும் அதிமுகவின் அரசியல் ரீதியான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.