2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

Photo of author

By Vijay

2016ல் இனித்தது இப்போ கசக்குதா? என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்? சீண்டிய அண்ணாமலை!

Vijay

Updated on:

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடையவர்களை இலக்கு வைத்து, அமலாக்கத்துறை (ED) அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இன்று தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. குறிப்பாக, கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் சக்திவேல், மேலும் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரருமான எம்சிஎஸ் சங்கர் வசிக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை

செந்தில் பாலாஜி மேற்பார்வையில் இயங்கும் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் டாஸ்மாக் (TASMAC) தலைமை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்த நடராசன் மாளிகையில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் விமர்சனம்

அமலாக்கத்துறை சோதனை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில்,

“2016-ல் தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த வருமானவரித்துறை சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனை பற்றி என்ன சொல்லப்போகிறீர்கள் முதல்வர் ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், “தமிழ்நாட்டை ஊழல் மையமாக மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவு தான் இன்று டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை தனது பதிவில், முதல்வர் ஸ்டாலின் முன்பே போட்ட ட்வீட் மற்றும் தற்போதைய டாஸ்மாக் அலுவலகம் தொடர்பான செய்தியை இணைத்தும் வெளியிட்டுள்ளார். அமலாக்கத்துறை நடத்திய இந்த தொடர் சோதனைகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.