தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் , கரூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகியன முதல் வகையிலும், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திருநெல்வேலி ,திருவள்ளூர் ,திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்கள் வகை இரண்டிலும், சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மூன்றாம் வகையிலும் இடம்பெற்று உள்ளன.
மேலும் கொரோனா தொற்று குறைந்து வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் ‘திருவிழாக்கள், அர்ச்சனை மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை’ என்றும் தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.