தற்போது பூனேயில் நடைபெற்று வரும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது 2-வது டெஸ்ட் போட்டி பூனேயில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவ், முகமது சிராஜ், கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் இன்னிங்ஸ் தொடங்கி விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் ஸ்பின்னர்களால் திணறியது. சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இவர்கள் இருவரின் அதிரடியான பந்து வீச்சினால் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்த அணியில் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்தரா 65 ரன்களும் அடித்தனர். இந்திய அணியில் சுந்தர் 7 விக்கட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வரும் சூழலில் ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளை சேர்த்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அவரது விக்கெட் எண்ணிக்கை 531 ஆக உயர்ந்தது.
இந்த சாதனை மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயனை (530 விக்கெட்) பின்னுக்குத் தள்ளிய அஸ்வின் தற்போது 7-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இலங்கையின் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்)பெற்று இந்த பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளார்.