தமிழர்களுடைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த திருநாளில் வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நல்ல நேரம் மற்றும் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
2025 ஜனவரி 14 ஆம் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். இந்த பொங்கல் திருநாளில் காலை 9.03 மணிக்கு தான் தை மாதம் பிறக்க உள்ளது. மேலும், நண்பகல் 3 மணி முதல் 4:30 மணி வரை ராகு காலமாக உள்ளது.
அதேசமயம் காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை எமகண்ட நேரம் இருப்பதால், வீட்டில் பொங்கல் வைப்பவர்கள் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலான நேரத்தில் பொங்கல் வைத்தால் சிறப்பு.ஒருவேளை அந்த நேரத்தில் பொங்கல் வைக்க முடியாதவர்கள் காலை 10.30 மணி முதல் 11 .30 மணி வரையிலான நேரத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபடலாம்.
நான்கு நாட்களாக கொண்டாடப்படும் இந்த தைப்பொங்கல் திருநாளானது முதல் நாள் போகையில் பழையவற்றை நீக்கிவிட்டு புதியவற்றை அதாவது நல்ல விஷயங்களை வரவேற்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாள் தைப்பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு நன்றி கூறும் விதமாகவும் மூன்றாவது நாள் மாட்டுப்பொங்கல் அன்று உழவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அதனை தொடர்ந்து நிலம் மற்றும் உழவுக்கு பயன்படக்கூடிய பொருட்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கடைசியாக நான்காவது நாளில் உறவுகளுடன் இணைந்து அன்பை பரிமாறிக் கொள்ள செய்யும் நாளாக இந்த நாள் விளங்குகிறது. மேலும் இந்த நான்காவது நாளில் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் ஜல்லிக்கட்டு போன்றவற்றை நடத்தி மக்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொள்வது வழக்கம்.