முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு?

Photo of author

By Savitha

முடிவுக்கு வந்தது கர்நாடக அதிமுகவின் கூட்டணி கனவு..?

தமிழர் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து அதிமுகவின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக.

2023 கர்நாடக சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் களமிறங்கும் கனவு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 தேதி நடைபெற உள்ள சூழலில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அதிமுக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறு உண்டு.

இந்த நிலையில் எதிர்வரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது கர்நாடக அதிமுக நிர்வாகிகள் பலரின் கருத்தாக இருந்தது. கர்நாடக அதிமுக சார்பில் நடைபெற்ற கருத்து கேட்டு கூட்டத்திலும், பாஜக கூட்டணியில் தமிழர்கள் அதிகம் வாழும் எட்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் குரல் எழுந்தது.

குறிப்பாக கோலார் தங்க வயல், புலிகேசி நகர், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளை கூட்டணி உடன்பாடு ஏற்பட்டால், அதிமுக கேட்டு பெற வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தற்போது வரை கூட்டணி தொடர்பான எந்த அறிவிப்பும் பாஜக மற்றும் அதிமுக தரப்பில் வெளியாகாத சூழலில் பாஜகவில் 212 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டமாக வெளியாகி இருக்கிறது.

இதில் அதிமுக கேட்டு பெறலாம் என எதிர்பார்த்து காத்திருந்த தமிழர்கள் வாழும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. இதனால் அதிமுக பாஜக கூட்டணி கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதுமட்டுமின்றி மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்கள் என 17 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பை மறுத்துள்ள பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைந்தாலும் தமிழர் தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றி அறிவிக்குமா என்பது கேள்விக்குறி தான்.

இதனால் பாஜகவுடன் கூட்டணியில் களமிறங்கும் கர்நாடகா அதிமுகவின் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாகவே கூறப்படுகிறது. கர்நாடக தேர்தலை பொருத்தமட்டில் கூட்டணி இல்லை என்றால் கூட அதிமுக, இரண்டு அல்லது மூன்று தொகுதிகளில் எப்போதும் தனித்துப் போட்டியிடுவதை வாடிக்கையாக கொண்டு வருகிறது.

இம்முறையும் அதிமுக தங்களது வேட்பாளர்களை சில தொகுதிகளில் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்தால் இதுவரை ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்களை களம் இறக்கி இருக்கும் நிலை மாறி முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்ற சூழல் உருவாகும்.

மற்றொருபுறம் அதிமுகவிலேயே இபிஎஸ் தரப்பு கர்நாடக தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை கூறாத நிலையில், எடப்பாடி தரப்புக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் இருந்து கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.