செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த பணிக்கான நியமனம் நிறைவு பெறும்!அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பு!
நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழக பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலக ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அவருடன் பள்ளி கல்வித்துறை ஆணையர் கா.நந்தகுமார் மற்றும் துறை சார்ந்த இயக்குனர்கள் இணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் அரசின் நலத்திட்டங்கள் செயல்பாடுகள் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி உரையாடினார்கள்.
அதனையடுத்து மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரிகளை தொடர்ந்து தற்போது துறை சார் இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பள்ளி கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம் பாடநூல் கழகம் என ஒவ்வொரு துறை வாரியாகவும் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில் தற்போதைய நிலை அதற்கான நிதி ஒதுக்கீடு போன்றவைகள் பற்றி சட்டப்பேரவை அறிவிப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அந்த ஆலோசனையில் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் குறித்து நீதிமன்ற வழக்கு நிலவரம், மழலையர் வகுப்புக்கான சிறப்பு ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பாகவும் பேசப்பட்டது. கல்வி தொலைக்காட்சிகளில் தலைமை செயல் அதிகாரியாக சிஇஓவாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணி நியமனம் ஆணையம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் அவரைப் பற்றி ஆராயும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்தனர். அவர் மீது எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த நபர்களில் இருந்து தகுதியான ஒரு நபர் தேர்வு செய்து நியமிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.
அப்போது அவர் தற்போதுள்ள நிலவரம் படி அரசு பள்ளிகளுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேண்டுமென்பதால் முதுநிலை ஆசிரியர் பணி நியமனம் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் அடிப்படையாக இதர ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ள ஆசிரியருக்கான ஊதியத்தை உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது எனவும் கூறினார்.