திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்! இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்!
தேனி சந்தைகள், பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகள், பூமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்ட தராசுகளை ஆய்வு செய்தனர். அப்போது பலரும் முத்திரையிடாத மற்றும் மிகவும் பழுதாகி சரியான எடையளவு காட்டாத தராசுகளை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து முத்திரையிடாத மற்றும் பயன்படுத்த தகுதியற்ற மொத்தம் 27 தராசுகள், 6 எடைக்கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் பொருட்களை பொட்டலமிடும் போது அதன்மேல் எடையளவு, விலை போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். ஆனால், அவ்வாறு எடையளவு குறிப்பிடாமல் இருந்த 50 கிலோ பருப்பு மூட்டையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தராசு பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு கடைக்காரருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.