குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!!

Photo of author

By Parthipan K

குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டது! ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு!!

உக்ரைன் மற்றும் ரஷியாவிற்கு இடையேயான போர் 15 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது.  போரை நிறுத்த பல்வேறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  இந்த நிலையில், இந்த போரினால் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷிய படைகள் மிக தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைனை விட்டு லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி உள்ளனர். இதுவரை இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன என உக்ரைன் அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதலுக்கு, சர்வதேச தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

அந்தவகையில், சுகாதார மையம் ஒரு போதும் தாக்குதலுக்கு இலக்காக கூடாது என ஐ.நா. அமைப்பின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள பிரசவ மற்றும் குழந்தைகள் மருத்துவமனை ஒன்றின் மீது நடந்த தாக்குதல் பயங்கரமானது.  போருடன் எந்தவித தொடர்பும் இல்லாத பொதுமக்கள் அதற்கு அதிக விலை கொடுத்து வருகின்றனர்.  உணர்வற்ற இந்த வன்முறை நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும்.  இந்த படுகொலைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உக்ரைன் அரசால் நடத்தப்பட்டு உள்ளது என ரஷ்ய ராணுவம் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.